டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கருவூலம்:  சீனப்பெருஞ்சுவர்!

உலக அதிசயங்களில் ஒன்று சீனப்பெருஞ்சுவர்!  உண்மையில் இச்சுவற்றின் சில பகுதிகள் மட்டுமே 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:31 pm

தங்க. சங்கரபாண்டியன்

Story image

உலக அதிசயங்களில் ஒன்று சீனப்பெருஞ்சுவர்!  உண்மையில் இச்சுவற்றின் சில பகுதிகள் மட்டுமே 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பெருஞ்சுவர் நான்கு முறை தொடர்ச்சியாகக் கட்டப்பட்டது. முதன் முறையாக கட்ட ஆரம்பித்தது 2200ஆண்டுகளுக்கு முன்!

 கி.மு. 208 க்வின் சின் ஹுவாங் என்னும் அரசன் சீனாவை ஆண்டான். இவன்தான் முதன் முறையாக பெருஞ்சுவரை எழுப்பினான்.

 மங்கோலியர் சீனாவைக் கைப்பற்றி ஆட்சியும் செய்தார்கள். இதைத் தடுக்கவே வடக்கு எல்லை முழுவதும் சுவர் கட்டப்பட்டது.

 சின் மன்னன் கட்டிய போது சுவரின் நீளம் 5,600 கி.மீ.  கிழக்கிலிருந்து மேற்காக இச்சுவர் கட்டப்பட்டது. கிழக்கே "யாலு' ஆற்றங்கரையில் தொடங்கி மேற்கே சியாயு கணவாயில் முடிந்தது. மலை சாதி மக்களும், மங்கோலியர்களும் சீனாவிற்குள் குதிரைகளில் வந்தனர். எனவே  குதிரைகள் தாண்ட முடியாதபடி சுவர் உயரமாகவும் அகலமாகவும் கட்டப்பட்டது.

பெரிய கல்லறை!

Story image


 சுவர் கட்டும் வேலையில் 3 லட்சம் அடிமைகள் பயன்படுத்தப்பட்டார்கள். பசி, பட்டினியால் பல்லாயிரம் மக்கள் மடிந்தார்கள்! அவர்கள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள். இதனால் இப்பெருஞ்சுவருக்கு "உலகிலேயே பெரிய கல்லறை' என்னும் பட்டப் பெயர் ஏற்பட்டது. கால வெள்ளத்தில் சுவர் முழுவதும் இடிந்து விழுந்து சிதைந்தது. 

 கி.பி. முதல் நூற்றாண்டில் "கான்' பரம்பரை மன்னன் மீண்டும் சுவரைக் கட்டினான். இந்தச் சுவரும் பல இடங்களில் இடிந்து விழுந்தது. கிராம மக்கள் சுவரை இடித்துக் கல். மரங்களை எடுத்துப் போய் வீடு கட்டப் பயன்படுத்தினார்கள். இதனால் பாதுகாப்பு குறைந்தது.

 கி.பி. 1138 முதல் 1195 வரை ஐந்து பரம்பரையினர் சீனாவை ஆண்டார்கள். இவர்கள் மீண்டும் பெருஞ்சுவரைக் கட்டினர். அப்படியும் நாட்டைப் பாதுகாக்க முடியவில்லை. மங்கோலிய மன்னன் ஒருவன் கோட்டையில் காவலுக்கு இருந்த தளபதிக்குக் கைக் கூலி கொடுத்து, படையுடன் உள்ளே நுழைந்து சீனாவையும் பிடித்துக் கொண்டான்.

 1368 முதல் 1620 வரை "மிங்' பரம்பரை சீனாவை ஆண்டது. 1368இல் பட்டத்துக்கு வந்த மிங்

மன்னன் 4ஆவது முறையாகப் பெருஞ்சுவரைக் கட்டினான். மங்கோலியரை வீழ்த்திவிட்டு ஆட்சிக்கு வந்தவன் இவன். எனவே மங்கோலியர்கள் மீண்டும் படையெடுக்க முடியாதபடி சுவரை வலுவாகக் கட்டினான். அப்போது சுவரின் நீளம் 7300 கி.மீ.!

Story image

 மலைகளிலிருந்து கல் எடுத்து இப்பெருஞ்சுவர் கட்டப்பட்டது! செங்கல்லும் பயன்படுத்தப்பட்டது. கல் கிடைக்காத பாலைவனப் பகுதிகளில் மரக் கட்டைகள் பயன் படுத்தப்பட்டன.

 கோட்டையின் உயரம், அகலம், இடத்துக்கு இடம் மாறுபட்டது. பீஜிங் பகுதியில் சுவரின் உயரம் 7.8 மீட்டர்!  அகலம் 5.8மீட்டர்! சுவர் மீது ஒரு குதிரைப் படை தாராளமாகப் போய்வரலாம்!

 பீஜிங்கிலிருந்து 110கி.மீ தொலைவிலுள்ள சீமாட்டை என்ற இடத்தில் மலை மீது சுவர் இருக்கிறது! இந்த இடத்தில் சுவரின் அகலம் 40 சென்டி மீட்டர்கள்தான். இந்தப் பாதையை "வான ஏணி' என்றும் "சொர்க்கப் பாதை' என்றும் சொல்கிறார்கள்! கடைசியாக "மிங்' மன்னர்கள் கட்டிய பெருஞ்சுவரும் பல இடங்களில் இடிந்து விழுந்து விட்டது. சில இடங்களில் தடையம் மட்டுமே இருக்கிறது. சுவரில் 1/3 பகுதிதான் மிச்சம்!

 சீனப் பெருஞ்சுவர் சீனாவின் சின்னமாக விளங்கக் கூடியது. என்று சீன அரசு எண்ணியது. எனவே பெருஞ்சுவரைப் புதுப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டது. பீஜிங்கிலிருந்து 60 கி.மீ. தொலைவிலுள்ள பதாலிங் என்னும் இடம் இதற்குத் தேர்ந்து எடுக்கப்பட்டது. இது பீஜிங்கிற்கு அருகில் இருந்ததுடன் ஓரளவு புதுப்பிக்கும்படியும் இருந்தது. எனவே சுவரைப் புதுப்பித்து, சீரமைத்துக் கட்டினார்கள். சுவரைப் பார்த்தால் புதுப்பிக்கப்பட்டது தெரியும்.

 பொது மக்கள் பார்க்க 1970ஆம் ஆண்டில் பெருஞ்சுவர் திறந்து விடப்பட்டது. 2008வரை 14 கோடிப்பேர் வந்து பார்த்துப் போனார்கள். அந்த அளவு சீனப் பெருஞ்சுவர் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கிறது. சீன அரசுக்கு நல்ல வருமானமும் கிடைக்கிறது.

 இங்கேயிருந்து சுவர் மீது நடந்து சென்றால் 3 நாள் பயணத்தில் "சீமாட்டை' யை அடைந்து விடலாம். அங்கு "மிங்' மன்னர்கள் கட்டிய அசல் சுவரைப் பார்க்க முடியும். இது மலைப்பாதை...,எனவே யாரும் நடப்பதில்லை. தனியாகப் போகக் கூடாது என்றும் சொல்கிறார்கள். சில பயணிகள் பீஜிங்கிலிருந்து சீமாட்டை போய் மலை மீது ஏறி சுவரைப் பார்க்கிறார்கள்.

காவல் கோபுரம்!

Story image

பெருஞ்சுவர்களில் ஆங்காங்கே காவல் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒரு கோபுரத்திற்கும் இன்னொரு கோபுரத்திற்கும் இடையே உள்ள தூரம் ஓர் அம்பு பாயும் தூரம் என்கிறார்கள்!  காவலர்கள் செல்லப் படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. பெருஞ்சுவர் தொடங்கும் "ஜியோங்' கணவாயில் யுவான் மன்னர் ஓர் அழகிய நுழைவு வாயில் கட்டியிருக்கிறார். அதன் வளைவில் கலை நிறைந்த சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த வாயில் இப்போதும் பராமரிக்கப்படுகின்றது.

எவ்வளவு நீளம்?

Story image


உலக அதியம் எனக் கருதப்படும் இந்தப் பெருஞ்சுவரின் நீளம் 6000 கி.மீ. முதல் 7000 கி.மீ வரை இருக்கலாம் எனக் கருதிக்கொண்டிருந்தார்கள். 1980இல் சுவரை அளந்தார்கள். மலைகள் இடிபாடுகள் காரணமாக சரியாக அளக்க முடியவில்லை. 6350 கி.மீ. நீளம் என்று உத்தேசமாகச் சொன்னார்கள்.

 2006இல் சுவரை அளக்க மீண்டும் முயற்சி நடந்தது. இதற்கு நில அளவைக்காரர்களை நியமிக்கும்படி பீஜிங் அரசு சுற்றறிக்கை அனுப்பியது. மாநில வாரியாக அவர்கள் அளந்து கூட்டிய போது 6400 கி.மீ. வந்தது. அதன் பேரில் பெருஞ்சுவரின் நீளம் 6400 கி.மீ.என்று முடிவு செய்யப்பட்டது. இது சென்னையிலிருந்து டெல்லிக்கு நேராகச் சென்று விட்டுத் திரும்பும் தூரம் ஆகும்.

Story image

 தற்போது கிடைத்துள்ள ஆதாரபூர்வமான தகவலின்படி சீனப்பெருஞ்சுவற்றின் நீளம்   8,851.8 கி.மீ (5,500.3மைல்) என்று தெரிய வந்துள்ளது!

 அது மட்டுமல்ல! நிலவிலிருந்து கூட சீனப் பெருஞ்சுவர் தெரிவதாக ஒரு வதந்தி உலவியது! ஆனால் முழுச் சுவரும் சுமார் 160கி.மீ தூரத்திலிருந்து தெரிய ஆரம்பித்துப் பின் 320 கி.மீ. (சுமார் 99கி.மீ முதல் 199கி.மீ வரை) வரை தெரிந்து பின் மனிதப் பார்வைக்கு மறைந்து விடும் என்பதே ஆதாரபூர்வமான உண்மை!

பத்தாயிரம் சுவர்!

Story image


மனிதன் கட்டிய மிகப்பெரிய கட்டிடம் சீனப்பெருஞ்சுவர்தான்! அதைப் பத்தாயிரம் சுவர் என்று சீனர்கள் சொல்வார்கள்! பெரியது எதையும் ஆயிரம், இரண்டாயிரம் என்று எண்களைச் சேர்த்துக் கூறுவது சீனர்களின் வழக்கம்! பெரிதினும் பெரிதான பெருஞ்சுவரை "பத்தாயிரம் சுவர்' என்று அவர்கள் பெருமிதத்துடன் அழைக்கின்றனர்!

Story image

 இந்த அதிசயச் சுவரை 1987ஆம் ஆண்டு உலகக் கலைச் செல்வங்களில் ஒன்றாக உலக நாடுகள் சபை (யுனெஸ்கோ) அறிவித்தது!

 நாம் வாழும் இந்த பூமியில் மனித ஆற்றலின் அதிசயிக்கத் தக்க சாதனை இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.